பாகிஸ்தானில் இன்று நிகழ்ந்த கார் குண்டு தாக்குதலில் 5 போலீசார் உடல் சிதறி பலி.

பாகிஸ்தானில் இன்று நிகழ்ந்த கார் குண்டு தாக்குதலில் 5 போலீசார் உடல் சிதறி பலியாகினர். 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.பாகிஸ்தானின் பெஷாவர் நகரின் வடமேற்கு பகுதியில் உள்ள வாகன சோதனைச் சாவடியில், போலீசார் இன்று அதிகாலை சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தீவிரவாதி ஒருவன் வெடிகுண்டுகள் நிரப்பிய காரில் வந்து, மோதி வெடிக்கச் செய்தான். இந்த பயங்கர சம்பவத்தில் 5 போலீசார் உடல் சிதறி பலியாகினர். 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவ இடத்தை பாதுகாப்புப்படையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு தமிழ் மக்களின் ஒரு வாக்கு தன்னும் கிடைக்காதவாறு செயற்படுவோம் -பிரபா கணேசன்.

ஐக்கிய தேசிய முன்னணியில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்றுக்கு தெரிவாகியுள்ள ஜனநாயக மக்கள் முன்னணியைச் சேர்ந்த பிரபா கணேசன் , தேசியப் பட்டியல் பாராளுன்ற உறுப்பினர் விவகாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தமது கட்சியை ஏமாற்றி விட்டதாக தெரிவித்துள்ளதுடன் , இதன் பிரகாரம் அம்முன்னணியிலிருந்து வெளியேறி தான் பாராளுமன்றில் சுயேட்சையாக செயல்படபோவதாகவும் , எதிர்காலத்தில் கொழும்பு மாவட்டத்தில் மட்டுமல்ல நாடுபூராகவும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு வாக்கு தன்னும் கிடைக்காதவாறு செயற்படுவோம் என தெரிவித்துள்ளார்.அதேநேரம் நுவரேலிய மாவட்டதிலிருந்து ஐக்கிய தேசிய முன்னணி ஊடாக பாராளுமன்றுக்கு தெரிவாகியுள்ள திகாம்பரம் அவர்களும் பாராளுமன்றில் சுயமாக இயங்கப்போவதாக தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.