மும்பை தாக்குதலுடன் தொடர்புடையவர் என கைது செய்யப்பட்ட அஜ்மல் கஸாப் குற்றவாளி என கூறி மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


மும்பை தாக்குதலுடன் தொடர்புடையவர் என கைது செய்யப்பட்ட அஜ்மல் கஸாப் குற்றவாளி என கூறி மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி மும்பையின் மிக பிரபல்யமான இடங்களை இலக்கு வைத்து லஷ்கர் - இ - தொய்பா தீவிரவாத அமைப்பினர் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.
இந்த தாக்குதல்களின் போது சுமார் 174 பேர் உயிரிழந்திருந்ததுடன், மேலும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்திருந்தனர்.
இவ்வாறு தீவிரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலுக்கு பதில் தாக்குதல் மேற்கொண்ட இந்திய பாதுகாப்பு பிரிவினர் அஜ்மல் கஸாப்பை மாத்திரமே உயிருடன் பிடித்திருந்தனர்.
குறித்த அமைப்பின் ஏனைய தீவிரவாதிகள் பாதுகாப்பு பிரிவினரின் பதில் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட அஜ்மல் கஸாப் மீதான வழக்கு விசாரணைகள் கடந்த ஒன்றறை வருடங்களாக மும்பை நீதிமன்றில் இடம்பெற்று வந்தது.
இந்நிலையிலேயே இன்றைய தினம் அஜ்மல் கஸாப் குற்றவாளி என கூறி மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதுடன், அவருக்கான தண்டனை நாளைய தினம் வழங்கப்படும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதேவேளை, இந்த தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த இரு இந்தியர்கள் இன்றைய தினம் மும்பை நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், மும்பை தாக்குதலுடன் தொடர்புடைய அஜ்மல் கஸாப்பிற்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments: